இரும்புலியூரில் தண்டவாளம் அருகே பாதையை அடைத்து சுவர் கட்டியதால் பொதுமக்கள் போராட்டம்


இரும்புலியூரில் தண்டவாளம் அருகே பாதையை அடைத்து சுவர் கட்டியதால் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 6:39 AM GMT (Updated: 17 Aug 2021 6:39 AM GMT)

இரும்புலியூர் பகுதியில் தண்டவாளம் அருகே பாதையை அடைத்து சுவர் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம்,

பொது மக்கள் ரெயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது ரெயில் மோதி உயிர் இழப்பதை தவிர்க்க நாடு முழுவதும் ரெயில் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையை அடுத்த தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை தண்டவாளத்தின் இருபுறங்களிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.

தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் பகுதியில் கிழக்கு பகுதியில் உள்ள பழைய ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைக்கு செல்லும் பாதையை அடைத்து தண்டவாளத்தின் அருகில் நேற்று முன்தினம் இரவு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று காலை தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேலையூர் மற்றும் தாம்பரம் போலீசார், தாம்பரம் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை ரெயில் மறியலில் ஈடுபடாமல் தடுத்தனர்.

இதையடுத்து தண்டவாளம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தாம்பரம் ரெயில் நிலைய அலுவலர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுரங்கப்பாதை

அப்போது பொதுமக்கள் கூறும்போது, “பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையை ரெயில்வே துறையினர் அடைத்து விட்டதால் கிழக்கில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்ல சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இதே இடத்தில் சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். அதுவரை தற்காலிகமாக தண்டவாளத்தை கடந்து செல்ல மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும்” என்றனர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணிவரை நீடித்தது. இதனால் வேறு வழியின்றி ரெயில்வே அதிகாரிகள், ஏற்கனவே இருந்த பாதைக்கு அருகிலேயே பொது மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்ட மனு ஒன்றும் தாம்பரம் ரெயில்வே கோட்ட உதவி பொறியாளர் மகேஸ்வரனிடம் வழங்கப்பட்டது. அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக அவர் கூறினார்.

Next Story