‘சதுரங்கவேட்டை’ படபாணியில் தங்கம் என ஆசையை தூண்டி பெண்ணிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடி


‘சதுரங்கவேட்டை’ படபாணியில் தங்கம் என ஆசையை தூண்டி பெண்ணிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடி
x
தினத்தந்தி 17 Aug 2021 6:53 AM GMT (Updated: 17 Aug 2021 6:53 AM GMT)

‘சதுரங்கவேட்டை’ படபாணியில் தங்கம் என ஆசையை தூண்டி பெண்ணிடம் ரூ.2 லட்சம் நூதன முறையில் மோசடி செய்த பெண் உள்பட வடமாநில கும்பல் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர்,

‘சதுரங்கவேட்டை’ திரைப்படத்தில் வரும், “ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு ஆசையை தூண்டவேண்டும்” என்ற வசனத்துக்கு ஏற்ப சென்னையில் பெட்டிக்கடை உரிமையாளரான பெண்ணின் ஆசையை தூண்டி, அவரிடம் வடமாநில கும்பல் ரூ.2 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 35). இவர், தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த சில நாட்களாக ஒரு பெண் உள்பட 3 பேர் அடிக்கடி வந்து குளிர்பானம் வாங்கி குடித்தனர். இதனால் அவர்களுக்கு லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

குண்டுமணி தங்கம்

இந்தநிலையில் அவர்கள், ‘எங்களிடம் ஒரு குண்டுமணி உள்ளது. அது தங்கமா? என சரிபார்த்து, தங்கம் என்றால் விற்று பணமாக தரும்படி” கூறினர். லட்சுமி, அதை நகை கடையில் கொடுத்து சரி பார்த்தார். அதில் அது சுத்தமான தங்கம் என தெரிந்தது. அதை விற்று ரூ.4 ஆயிரம் வாங்கி அவர்களிடம் கொடுத்தார்.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் அவர்கள் லட்சுமி கடைக்கு வந்து அதேபோல் 2 குண்டுமணியை கொடுத்து விற்று தரும்படி கேட்டனர். அதுவும் சுத்தமான தங்கம் என்பதால் ரூ.8 ஆயிரத்துக்கு கடையில் விற்று கொடுத்தார். இதனால் அவர்கள் மீது லட்சுமிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

ரூ.2 லட்சம்

இதற்கிடையில் அவர்கள், “நாங்கள் மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக சுரங்கம் தோண்டும்போது தங்க குண்டு மணியால் ஆன நிறைய சங்கிலிகள் கிடைத்தது. அதில் உள்ள சில குண்டுமணிகளைத்தான் உங்களிடம் கொடுத்து விற்க சொன்னோம். இன்னும் எங்களிடம் அதுபோல் நிறைய தங்க குண்டுமணியால் ஆன சங்கிலிகள் உள்ளன. ரூ.4 லட்சம் மதிப்பிலான அந்த தங்க குண்டுமணி சங்கிலியை நீங்கள் வைத்துக்கொண்டு எங்களுக்கு ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும்” என ஆசை வார்த்தைகள் கூறினர்.

ஏற்கனவே அவர்கள் கொடுத்த குண்டுமணிகள் சுத்தமான தங்கம் என்பதாலும், ரூ.2 லட்சம் கொடுத்து வாங்கினால் கூடுதலாக ரூ.2 லட்சம் லாபம் கிடைக்கும் என்ற பேராசையாலும் லட்சுமி, அந்த கும்பலிடம் இருந்த குண்டு மணியால் ஆன சங்கிலியை வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சத்தை கொடுத்தார்.

போலி நகை

பின்னர் அந்த கும்பல் சென்ற பிறகு லட்சுமி அதை, நகை கடையில் கொடுத்து சோதனை செய்தார். அதில் அது, தங்க நகை அல்ல, போலி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பிறகுதான் அந்த வடமாநில கும்பல் தனக்கு முதலில் உண்மையான தங்கத்தை கொடுத்து ஆசையை தூண்டி, பின்னர் போலியான நகையை கொடுத்து ரூ.2 லட்சத்தை மோசடி செய்துவிட்டதை அறிந்தார். கூடுதலாக ரூ.2 லட்சம் லாபம் கிடைக்கும் என்ற பேராசையால் தனது ரூ.2 லட்சத்தை இழந்த லட்சுமி, இந்த மோசடி குறித்து அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண் உள்பட 3 பேரின் உருவங்களை வைத்து அந்த வடமாநில கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story