மினி பஸ் உரிமத்தை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வட்டார போக்குவரத்து சூப்பிரண்டுக்கு 4 ஆண்டுகள் சிறை


மினி பஸ் உரிமத்தை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வட்டார போக்குவரத்து சூப்பிரண்டுக்கு 4 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 17 Aug 2021 8:48 AM GMT (Updated: 17 Aug 2021 8:48 AM GMT)

மினி பஸ் உரிமத்தை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து சூப்பிரண்டுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் துளசிராமன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது மினிபஸ் உரிமத்தை புதுப்பிக்க திருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு இருந்த சென்னை முகப்பேரை சேர்ந்த வட்டாரப்போக்குவரத்து சூப்பிரண்டு விஜயகுமார் (வயது 53) என்பவர் மினிபஸ் உரிமத்தை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனால் லஞ்சம் தர விரும்பாத துளசிராமன் இதுகுறித்து காஞ்சீபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

4 ஆண்டுகள் சிறை

இதைத்தொடர்ந்து கண்காணிப்பாளர் விஜயகுமார் லஞ்சப்பணத்தை வாங்க முயன்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் லஞ்சத்தை பெற்றதற்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story