திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் கொலை
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு கல்லூரணி இந்திராநகர் எதிரே உள்ள காலிமனை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் கொலை செய்யப்பட்ட பாலமுருகன் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
5 பேர் கைது
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை தொடர்பாக மாத்தூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்(20),பிரசாந்த்(20) மணிகண்டன்(22) விஜய்(25), 15 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.