மசாஜ் சென்டர் உரிமையாளரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்தவர் கைது
மதுரையில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் உரிமையாளரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை,
மதுரையில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் உரிமையாளரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
உரிமம்
மதுரை தல்லாகுளம் பழைய அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 62). இவர் அதே பகுதியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது நிறுவனத்திற்கு 3 பேர் வந்தனர். அவர்கள் தங்களை நிருபர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.
மேலும் அவர்கள் தங்களை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்திருப்பதாகவும், உங்கள் மசாஜ் சென்டருக்கு உரிமம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் உங்கள் மசாஜ் சென்டருக்கு உரிமம் இல்லை என்பது எங்களுக்கு தெரியும். அது குறித்து புகார் கொடுத்தால் உங்கள் மசாஜ் சென்டர் மூடும் நிலை ஏற்படும்.
மிரட்டல்
எனவே நீங்கள் எங்களுக்கு ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் இது போன்ற நடவடிக்கையில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்றனர். இதனை நம்பிய ராமகிருஷ்ணன் அவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அவர் பணத்தை செலுத்தியுள்ளார். பணம் கிடைத்த பிறகு அவர்கள் 3 பேரும் மேலும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு அவரை மிரட்ட தொடங்கினர். இது குறித்து அவர் தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் 3 பேரும் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் அவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
கைது
அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மதுரை விஸ்வநாதபுரம் மேற்கு தெருவை சேர்ந்த கார்த்திக் (40) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள உசேன், ஹமீது ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story