கூரியர் பார்சல் சர்வீஸ் மூலம் கடத்த முயன்ற 960 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு கூரியர் பார்சல் சர்வீஸ் மூலம் கடத்த முயன்ற 960 கிலோ குட்கா மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு கூரியர் பார்சல் சர்வீஸ் மூலம் கடத்த முயன்ற 960 கிலோ குட்கா மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா
மதுரையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை என குட்கா பொருட்களை விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று குட்கா விற்பவர்கள், கடத்துபவர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு மதுரை வழியாக பெரிய அளவில் குட்கா கடத்துவதாக திலகர்திடல் போலீஸ் உதவி கமிஷனர் ரமேசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பை-பாஸ் ரோட்டில் உள்ள ஒரு கூரியர் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் அந்த குட்கா பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 32 பார்சலில் இருந்த 960 கிலோ குட்காவை போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர் அந்த குட்கா எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரித்த போது, நெல்லை, வள்ளியூர் உள்ளிட்ட அதனை சுற்று வட்டார பகுதிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
மேலும் அந்த பார்சல்களின் உரிமையாளர்களை பிடிக்க போலீசார் அந்த கூரியர் வாகனத்தில் நெல்லை சென்று அங்கு 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூடங்குளத்தை சேர்ந்த கண்ணன் (வயது 49), வாழகுரு (34), தூத்துக்குடி மாவட்டம் பாண்டியராஜா (32) என்பது தெரியவந்தது. இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, 960 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
ஒத்தக்கடை
அதே போன்று ஒத்தக்கடை அருகே சுமார் 240 கிலோ குட்கா பொருட்களுடன் 2 பேரை மாட்டுத்தாவணி போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் சிவா (47), காதர் (35) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மதுரையில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் சுமார் 1,200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குட்காவை பறிமுதல் செய்த திலகர்திடல் போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
Related Tags :
Next Story