இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்டோருக்கு மோடி அமைச்சரவையில் வாய்ப்பு; அறச்சலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு


இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்டோருக்கு மோடி அமைச்சரவையில் வாய்ப்பு; அறச்சலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு
x
தினத்தந்தி 18 Aug 2021 3:34 AM IST (Updated: 18 Aug 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்டோருக்கு மோடி அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக அறச்சலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.

அறச்சலூர்
இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்டோருக்கு மோடி அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக அறச்சலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார். 
சிறப்பான வரவேற்பு
மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை ராஜாங்க மந்திரியாக தமிழக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளார். இவர் மக்கள் ஆசி யாத்திரை என்ற யாத்திரையை கோவையில் இருந்து தொடங்கினார். அந்த யாத்திரை நேற்று ஈரோடு மாவட்டம் அறச்சலூர் வந்தடைந்தது. அப்போது அறச்சலூர் கொடுமுடி கைகாட்டி பகுதியில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணி கலந்து கொண்டு மத்திய மந்திரி எல்.முருகனை வரவேற்றார். இதைத்தொடர்ந்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார். 
ஊக்கத்தொகை
அப்போது அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் ஆட்சியில் இதுவரை இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மலைவாழ் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் உள்பட 43 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்து உள்ளது. 
அதுமட்டுமின்றி மக்களுக்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைவருக்கும் வீடு, அனைத்து வீடுகளுக்கும் மானியத்துடன் கழிப்பறை, தனிநபருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் வசதி, விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படு்த்தி வருகிறார். எனவே மக்களாகிய நீங்கள் அனைவரும் எங்களுக்கு நல்ல ஆசியை வழங்க வேண்டும்,’ என்றார். 
ரேஷன் கடையில் ஆய்வு
இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மொடக்குறிச்சி சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ., கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய இளைஞர் துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தம், மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி துணைத்தலைவர் கலைச்செல்வன், மண்டல பொதுச்செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முன்னதாக ஏகலைவன் ராணுவ பயிற்சி பள்ளிைய பிரதமர் மோடி தொடங்கியதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரிடம் அறச்சலூரை சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் அய்யப்பன் என்பவர் நன்றி தெரிவித்தார்.
யாத்திரை முடிந்து ஈரோட்டுக்கு செல்லும் வழியில் அறச்சலூர் சந்தைப்பேட்டை எதிரில் உள்ள ரேஷன் கடைக்கு   மத்திய  மந்திரி எல்.முருகன் திடீரென சென்றார். 
அப்போது அங்கிருந்த கடை விற்பனையாளர் ஜானகியிடம் அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவை முறையாக வழங்கப்படுகிறதா? என கேட்டதுடன் இருப்பு சரியாக உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களுக்கு சரியான எடையில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் விற்பனையாளரிடம் அவர் உத்தரவிட்டார்.

Next Story