பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு
பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ஈரோட்டில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு,
பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ஈரோட்டில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய மந்திரிக்கு வரவேற்பு
மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை ராஜாங்க மந்திரியாக தமிழக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் நியமிக்கப்பட்டார். மத்திய மந்திரியாக பொறுப்பு ஏற்ற எல்.முருகன் மக்கள் ஆசி என்ற பெயரில் ஒவ்வொரு பகுதியாக சென்று வருகிறார். நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்தார்.
ஈரோடு வந்த மத்திய மந்திரி எல்.முருகனுக்கு பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரோடு காளை மாடு சிலை சந்திப்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில பட்டியல் அணி துணைத்தலைவர் என்.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.
மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு பட்டியல் அணி துணைத்தலைவர் விநாயகமூர்த்தி மாலை அணிவித்தும், மலர் கிரீடம் அணிவித்தும் வரவேற்பு அளித்தார்.
சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, கூடி இருந்த பெண்கள் மலர் தூவினார்கள். தாரை தப்பட்டைகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு உள்ள கன்னிமார், மதுரை வீரன், கருப்பணசாமி கோவிலுக்கு சென்று மத்திய மந்திரி மற்றும் நிர்வாகிகள் சாமி கும்பிட்டனர்.
சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்
பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரி எல்.முருகன் பேசும்போது, ‘சாதாரண குடும்பத்தை சேர்ந்த என்னை பிரதமர் மோடி மத்திய அரசின் மந்திரியாக பதவி அளித்து உள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் அருந்ததி யர் சமூகத்தை சேர்ந்தவர் களுக்கு பிரதமர் மோடி கவுரவம் அளிக்கும் வகையில் எனக்கு மந்திரி பதவி அளித்து இருக்கிறார். அவருக்கு நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். மக்கள் ஆசிக்காக வந்த என்னை வருணபகவான் மழை வடிவில் ஆசீர்வதிக்கிறார்’ என்றார்.
அவர் அருந்ததியின மக்கள் மத்தியில் பேசும் தெலுங்கு மொழியில் பேசினார்.
சமூக நீதி
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘மத்திய மந்திரி எல்.முருகனின் தாத்தா செருப்பு தைக்கும் தொழில் செய்தார். அவரது தந்தை விவசாய தொழில் செய்தார். முருகன் மத்திய இணை மந்திரியாக பதவி வகிக்கிறார். இதுதான் சமூக நீதி.
எந்த ஒரு அவையிலும் உறுப்பினராக இல்லாத அவரை பிரதமர் மோடி மத்திய மந்திரியாக நியமித்து சமூக நீதியை நிலைநாட்டி உள்ளார்’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.கே.கார்வேந்தன், பேராசிரியர் ரமேஷ், வெங்கடேஷ் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணி வரவேற்றார்.
மத்திய மந்திரி முருகனை வரவேற்கும் வகையில் சிலம்பாட்டம், கரகாட்டம், மதுரை வீரன் வேடமிட்ட கலைஞர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, தாரை- தப்பட்டை இசை முழக்கம், நாதஸ்வரம், தவில் இசை என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கூடி இருந்தனர். கொரோனா சமூக இடைவெளி பின்பற்றப்படாததும், பலரும் முகக்கவசங்கள் அணியாமல் கலந்து கொண்டதும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story