ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழு தமிழக அரசு உத்தரவு


ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழு தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 18 Aug 2021 10:11 AM IST (Updated: 18 Aug 2021 10:11 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழு தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

தமிழக தொழில்துறை முதன்மை செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உயர்மட்ட தொழில்நுட்ப குழு மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி, மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதி நேர உறுப்பினரான சுல்தான் அகமது இஸ்மாயில் குழுவின் தலைவராக நியமிக்கப்படுகிறார். சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் இந்துமதி எம்.நம்பி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் மகேஸ்வரி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செல்வம், பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி, பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பின் நிர்வாக என்ஜினீயர் ராஜா ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் உறுப்பினர் மற்றும் கன்வீனராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த குழு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர், மண்ணின் தரம், காற்றின் தரம், பாசன வசதி பாதிக்கப்படுவது குறித்தும் தாவரங்கள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் மதிப்பீடு செய்யும்.

இதுதவிர வேறு எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது பற்றியும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவு உற்பத்தி பாதிக்குமா? என்பது பற்றியும் இந்த குழு ஆய்வு செய்யும். ஆய்வறிக்கையை 4 மாதத்துக்குள் இந்த குழு சமர்ப்பிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story