கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதாக ரூ.3.20 கோடி மோசடி சென்னையில் மத்திய அரசு அதிகாரி அதிரடி கைது


கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதாக ரூ.3.20 கோடி மோசடி சென்னையில் மத்திய அரசு அதிகாரி அதிரடி கைது
x
தினத்தந்தி 18 Aug 2021 12:07 PM IST (Updated: 18 Aug 2021 12:07 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதாக கூறி ரூ.3.20 கோடி மோசடியில் ஈடுபட்டதாக மத்திய அரசு அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் மத்திய அரசு நிறுவனம் ஆகும். சைதாப்பேட்டை பனகல் மாளிகை கட்டிடத்தில் இதன் அலுவலகம் செயல்படுகிறது. இதில் சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல துணை பொதுமேலாளராக பணியில் இருப்பவர் ராஜன் (வயது 52). இவர் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முக கவசம், சானிடைசர் மற்றும் கையுறை போன்ற கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதற்கு தேவையான முன்பணத்தை நீங்கள் முதலீடு செய்தால், கொரோனா தடுப்பு உபகரணங்கள் சப்ளை செய்யப்பட்டவுடன் அரசிடம் நீங்கள் முதலீடு செய்த பணத்தை பெற்று தருகிறேன். அதில் கமிஷன் தொகையும் பெற்று தருகிறேன் என்றார். அதை உண்மை என்று நம்பி, ராஜன் சொன்ன 3 நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் சப்ளை செய்ய ரூ.3.20 கோடி கொடுத்தேன்.

மோசடி-கைது

ஆனால் ராஜன் சொன்னதுபோல கொரோனா தடுப்பு உபகரணங்கள் எதையும் குறிப்பிட்ட 3 நிறுவனங்களும் சப்ளை எதுவும் செய்யவில்லை. அந்த நிறுவனங்கள் ராஜனுக்கு வேண்டிய நிறுவனங்கள் என்று தெரியவந்தது. இதனால் நான் கொடுத்த பணம் ரூ.3.20 கோடியை திரும்பக் கேட்டேன். அதையும் திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டனர்.

இந்த மோசடியில் ராஜனுக்கு பெரும் பங்கு உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். உதவி கமிஷனர் ராஜசேகரன் மேற்பார்வையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. ராஜன் நேற்று கைது செய்யப்பட்டார்.

Next Story