ரோட்டில் குட்டியுடன் நின்ற யானை

ஆசனூர் அருகே கரும்பு லாரியை எதிர்பார்த்து ரோட்டில் குட்டியுடன் யானை நின்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன, இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். எனினும் தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் அருகே கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரிகளை எதிர்பார்த்து யானைகள் குட்டியுடன் உலா வருவதும், அவ்வாறு வரும் கரும்பு லாரிகளை வழிமறைத்து, கரும்புகளை எடுத்து தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
நேற்று இரவு 7 மணியளவில் வழக்கம்போல் காரப்பள்ளத்தில் கரும்பு லாரியை எதிர்ப்பார்த்து குட்டியுடன் ஒரு யானை நடுரோட்டிலேயே நின்றுகொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடத்துக்கு பிறகு யானை சென்றது. அதன்பிறகே போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story






