ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
போக்சோ
ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், காக்கும் கரங்கள் என்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக குழந்தைகள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அதை தங்களுடைய பெற்றோரிடம் தைரியமாக தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
விழிப்புணர்வு
இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானி, கோபி, பவானிசாகர், சத்தியமங்கலம் போன்ற கிராம பகுதிகளில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடந்து வருகிறது. இதுகுறித்து நாங்கள் காக்கும் கரங்கள் குழுக்களுடன் இணைந்து, குறிப்பாக மலை கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். குழந்தை திருமணம் சட்டப்படி தவறு என்றும், அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும் பெற்றோர்களிடம் தெரிவித்து வருகிறோம்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 10 குழந்தைகள் திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் 59 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் 4 பேருக்கு, முதல் -அமைச்சர் நிவாரண உதவியாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் தகவலுக்கு ஈரோட்டில் உள்ள ஜவான் பவான் கட்டிடத்தின் 2-ம் தளத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story