மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகளுக்கு சிறப்பு முகாம்; ஆர்.டி.ஓ. கோரிக்கை மனுக்கள் பெற்றார்


மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகளுக்கு சிறப்பு முகாம்; ஆர்.டி.ஓ. கோரிக்கை மனுக்கள் பெற்றார்
x
தினத்தந்தி 20 Aug 2021 2:32 AM IST (Updated: 20 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் ஆர்.டி.ஓ. பிரேமலதா கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார்.

ஈரோடு
மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் ஆர்.டி.ஓ. பிரேமலதா கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார்.
இலங்கை அகதிகள் முகாம்
ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட ஈஞ்சம்பள்ளி, அறச்சலூர் மற்றும் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு இலங்கை தமிழர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு தமிழக அரசு மூலம் பல்வேறு சலுகைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் சமூக நலத்திட்டங்கள் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் அகதிகள் முகாம் மக்கள் இருப்பதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்தன.
விழிப்புணர்வு முகாம்
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குனர் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி, அறச்சலூர், பவானிசாகர் முகாம்களில் அதிகாரிகள் சிறப்பு முகாம்கள் நடத்த ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் முகாமில்  இலங்கை தமிழர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
முகாமுக்கு ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பூங்கோதை மற்றும் மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனுக்கள்
முகாமில் ஆர்.டி.ஓ. பிரேமலதா பேசும்போது, தமிழ்நாடு அரசு அனைத்து மக்களுக்கும் வருவாய்த்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு கல்விக்கான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கு இதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றை அகதிகள் முகாமில் உள்ள மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பெண்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து 181 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதுபோல் மகளிர் திட்டம் மூலம் வழங்கப்படும் உதவிகளையும் பெறலாம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஆர்.டி.ஓ. பிரேமலதா, சமூக நலத்துறை அதிகாரி பூங்கோதை ஆகியோர் வெளியிட்டனர். மகளிர் திட்டம் மற்றும் சமுக நலத்துறை சார்பில் பெண்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அகதிகள் முகாமில் வசிக்கும் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து ஆர்.டி.ஓ. கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார். முன்னதாக அகதிகள் முகாம் வளாகத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் முகாம் பகுதிகளை தூய்மையாக வைக்கவும் ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Next Story