குற்ற செயல்களை தடுக்க, பவானியில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்


குற்ற செயல்களை தடுக்க, பவானியில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 Aug 2021 9:08 PM GMT (Updated: 19 Aug 2021 9:08 PM GMT)

பவானி நகரத்தில் குற்ற செயல்களை தடுக்க 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பவானி
பவானி நகரத்தில் குற்ற செயல்களை தடுக்க 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குற்ற செயல்களை தடுக்க...
ஈரோடு மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி மற்றும் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் போலீஸ் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். 
அதன்படி பவானி நகர பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். போலீசாருடன், இணைந்து பொதுமக்களும் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என போலீஸ் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 
கண்காணிப்பு கேமரா
இந்த நிலையில் பவானி நகர பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ‘திருட்டு, வழிப்பறி மற்றும் குற்ற செயல்களை தடுக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும் பவானி நகர பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது,’ என ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து பவானி வி.என்.சி. கார்னர் பகுதி அருகே பொதுமக்களின் பங்களிப்போடு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பவானி நகர அனைத்து வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

Next Story