ஈரோட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு


ஈரோட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Aug 2021 2:59 AM IST (Updated: 20 Aug 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 23 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 23 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகை -பணம் கொள்ளை
ஈரோடு பெருந்துறை ரோடு பழையபாளையம், கே.சி.பி. சின்னவர் வீதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 59). ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர் கடந்த மாதம் 14-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே தாடிக்கொம்பில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்தோடு சென்றார். பின்னர் மறுநாள் நள்ளிரவில் அனைவரும் வீடு திரும்பினர்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மற்றும் 23 பவுன் நகைகளை காணவில்லை. அதை மர்மநபர்கள் யாரோ கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சண்முகவேல் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
2 பேர் கைது
மேலும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, பழனிவேல், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் நேற்று தனிப்படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 21), தமிழ்வாணன் (21) ஆகியோர் என்பதும், இவர்கள் தான் சண்முகவேல் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது. 
இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவரை பிடித்தால் மட்டுமே சண்முகவேல் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story