புதிய நிபந்தனைகளை நீக்கி தடையின்றி பயிர் கடன்கள் வழங்க வேண்டும்; சென்னிமலை கூட்டுறவு செயலாளரிடம் விவசாயிகள் மனு
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் புதிய நிபந்தனைகளை நீக்கி விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என சென்னிமலையில் உள்ள கூட்டுறவு சங்க செயலாளரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சென்னிமலை
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் புதிய நிபந்தனைகளை நீக்கி விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என சென்னிமலையில் உள்ள கூட்டுறவு சங்க செயலாளரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பயிர் கடன்
தமிழகம் முழுவதும் உள்ள வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் பயிர் கடன்கள் மூலம் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு தற்போது பயிர் கடன்கள் வழங்குவதற்கு புதிய நிபந்தனையை அறிவித்து உள்ளது. அதன்படி பயிர் கடன்கள் பெறுவதற்கு நடப்பு பருவத்தில் செய்கிற பயிர் பற்றிய விவரங்களை அடங்கல் ஆவணத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
எதிர்ப்பு
அடங்கல் ஆவணத்தில் எப்போதும் கடந்த கால பயிர் விவரங்கள் தான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது புதிய விதிமுறைகளின் படி நடப்பு ஆண்டில் செய்கிற பயிர் விவரங்களை அடங்கல் ஆவணத்தில் கொடுக்க வேண்டும் என கேட்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அரசின் இந்த புதிய நிபந்தனைகளுக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே புதிய நிபந்தனைகளை நீக்கி தடையின்றி பயிர் கடன்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அம்மாபாளையம்- பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜி.தங்கராஜ் தலைமை தாங்கினார். சங்க இயக்குனர் துரை, ஊராட்சி தலைவர்கள் எம்.சதீஸ்குமார் (பசுவபட்டி), அ.பரமேஸ்வரன் (புதுப்பாளையம்) மற்றும் வக்கீல் பி.சி.அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன் கலந்துகொண்டு பேசுகையில், ‘கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்து உள்ளது. ஆனால் அடங்கல் ஆவணம் வேண்டும் எனக்கூறி இதுவரை விவசாயிகளுக்கு வங்கிகள் நகைகளை திருப்பி தராமல் உள்ளது. இதனால் மேலும் பயிர் கடன்கள் பெற முடியவில்லை. பயிர் வாரியாக வரி விதிப்பு இருந்த காலங்களில் தான் முறையாக பயிர் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அடங்கலில் பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது இதற்காக அதிகாரிகள் யாரும் இல்லை.
மனு
அதனால் அடங்கல் ஆவண முறையை மாற்றி வழக்கம் போல் விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் வழங்க வேண்டும். இது சம்பந்தமாக விவசாயிகள் சார்பில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை வைப்போம்,’ என்றார். இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அம்மாபாளையம்- பசுவபட்டி விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு விவசாயிகள் ஊர்வலமாக நடந்து சென்று சங்க செயலாளர் பழனிசாமியிடம் தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
Related Tags :
Next Story