சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து நீதிபதி ஜோதிமணி ஆய்வு

தேசிய பசுமை தீர்ப்பாயம், திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதிபதி ஜோதிமணி நேற்று முன்தினம் மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட திருவீதியம்மன் கோவில் தெரு மற்றும் மல்லிகா தோட்டம், மணலி மண்டலத்துக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு ஆகிய இடங்களில் வீடுகள்தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை ஆய்வு செய்தார்.
மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட ஜி.என்.டி. சாலை மயானபூமி, திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட சீத்தாராம் நகர் மயானபூமி மற்றும் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிறு அளவிலான பதனிடும் மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் செயல்பாட்டு முறை மற்றும் உரத்தின் தரத்தினை கேட்டறிந்து, இந்த மையங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதாக பாராட்டினார்.
பின்னர் மணலி மண்டலம், எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள 10 டன் திறன் கொண்ட எரியூட்டு கலன் மற்றும் மாதவரத்தில் செயல்பாட்டில் உள்ள காற்றுப்புகும் வகையிலான பதனிடுதல் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அண்ணா பிள்ளை சாலையில் உள்ள தோட்டக்கழிவு பதப்படுத்தும் ஆலையினையும் அவர் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story