பூந்தமல்லி அருகே வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் பலி; ‘ரேபீஸ்’ நோய் தாக்கியதால் பரிதாபம்
வெறிநாய் கடித்ததில் ‘ரேபீஸ்’ நோய் தாக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
வெறிநாய் கடித்தது
பூந்தமல்லியை அடுத்த அகரமேல் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, அந்த வழியாக சென்ற சிறுவர்கள் சிலரை கடித்து குதறியது. இதில் 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலர் ‘ரேபீஸ்’ நோய் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடைய 7 வயது மகன் மோனீஷ் என்பவனையும் அந்த வெறிநாய் கடித்து குதறி இருந்தது. இதில் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்து இருந்த அவனுக்கு தடுப்பூசி ஏதும் போடவில்லை என கூறப்படுகிறது.
‘ரேபீஸ்’ தாக்கி பலி
இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு சிறுவன் மோனீசுக்கு திடீரென நாயை போன்று நாக்கில் இருந்து எச்சில் ஊறுதல், தண்ணீரை கண்டால் ஓடுவது என அவனது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் பயந்துபோன அவனது பெற்றோர், மோனீசை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுவனை ‘ரேபீஸ்’ நோய் தாக்கி இருப்பது தெரிந்தது. அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த மோனீஷ், சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தான்.
கணக்கெடுப்பு
இதையடுத்து வெறிநாயால் கடிபட்ட சிறுவர்கள் யார்?, யார்?. அவர்கள் தடுப்பூசி போட்டு உள்ளார்களா?. ‘ரேபீஸ்’ நோயால் பலியான சிறுவனின் பெற்றோர் மற்றும் அவனுடன் பழகியவர்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ‘ரேபீஸ்’ தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘ரேபீஸ்’ நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவனின் எச்சில் பட்டால் அவர்களுக்கும் ‘ரேபீஸ்’ நோய் தாக்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகரமேல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவதால் அதனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வெறிநாய் கடித்த ஒரு மாதத்துக்கு பிறகு ‘ரேபீஸ்’ நோய் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அவனது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story