கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை; மாவட்ட கலெக்டருக்கு மனு


கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை; மாவட்ட கலெக்டருக்கு மனு
x
தினத்தந்தி 23 Aug 2021 8:02 AM GMT (Updated: 23 Aug 2021 8:02 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி அமைக்கப்பட்ட இந்த முகாமில் தற்போது 915 குடும்பங்களைச் சேர்ந்த 2,735 தமிழர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். இது தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்து உள்ள மிகப்பெரிய திறந்தவெளி முகாம் ஆகும்.

இந்த முகாமில் வசித்து வரும் தமிழர்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

முகாமில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். முகாமில் தினமும் அடிக்கடி தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு வருகிறது. தெரு விளக்குகள் முறையாக எரிவது இல்லை.

கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படவில்லை. புதிதாக அமைக்கப்பட்டு உள்ள குடியிருப்பு பகுதி சீரமைக்கப்பட வேண்டும். அங்கு மின்வினியோகம் மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். மேலும், முகாமில் உள்ள சுடுகாட்டிற்கு முறையான பாதை அமைத்து தருவதுடன், அப்பகுதிக்கு மதில் சுவர் அமைப்பது என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story