ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்
ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்
மதுரை
கொரோனா கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, தடுப்பூசி தான். தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசும் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரை நகர் பகுதியில் தினமும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். மேலும் பலர் தடுப்பூசி செலுத்துவதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
இதற்கிடையே நேற்று முதல் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன் விளைவாக நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதன் எதிரொலியாக பல வாரங்களுக்கு பிறகு நேற்று மதுரையில் ஒரே நாளில் 16 ஆயிரத்து 738 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை இருந்தபோது ஒரே நாளில் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை நிலவரப்படி மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2600, அரசு மருத்துவமனைகளில் 1410, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 27720 என மொத்தம் 31 ஆயிரத்து 730 தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுபோல் மாவட்ட சுகாதார கிடங்கில் வேறு எதுவும் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story