மேம்பாலத்தில் ஏறி நின்று தீக்குளித்து வாலிபர் தற்கொலை; எரியும் தீயுடன் கீழே குதித்ததால் பரபரப்பு
நெமிலிச்சேரி மேம்பாலத்தில் நின்றபடி தீக்குளித்த வாலிபர், திடீரென அங்கிருந்து உடலில் எரியும் தீயுடன் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சமையல்காரர்
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 55). இவருக்கு சத்யநாராயணன் (26), சூரியநாராயணன் (24) என 2 மகன்கள். இதில் இளைய மகன் சூரியநாராயணனுக்கு திருமணமான நிலையில், மூத்த மகன் சத்யநாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிகிறது.சத்யநாராயணன், திருநின்றவூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி, வடபழனியில் உள்ள சங்கரமடத்தில் சமையல்காரராக வேலை செய்து வந்தார்.நேற்று அதிகாலை 5 மணி அளவில் சத்யநாராயணன் தனது மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெமிலிச்சேரி மேம்பாலத்தில் சென்றபோது சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பாட்டிலில் பிடித்தார். பிறகு 20 அடி உயரமுள்ள பாலத்தின் மீது ஏறி நின்றபடி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி திடீரென தீ வைத்துக்கொண்டார்.
தற்கொலை
தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடலில் எரியும் தீயுடன் அவர், மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்ததுடன், தீயிலும் உடல் கருகியதால் சத்யநாராயணன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சத்யநாராயணன், தனக்கு திருமணமாகாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story