31-ந் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம்


31-ந் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம்
x
தினத்தந்தி 25 Aug 2021 1:50 AM IST (Updated: 25 Aug 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் வருகிற 31 ந் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்.

மதுரை, 
விவசாயிகள் வருகிற 31-ந் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்.

குறுவை பருவம்

மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி எந்திர நடவு திடலினை கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் குறுவை நெல் பயிர்களுக்கு இரு போக சாகுபடி 9 ஆயிரத்து 704 எக்டேர் பரப்பளவில் நெல் நடவாகி உள்ளது. அதே சமயத்தில் கடந்த ஆண்டு வெறும் 1,451 எக்டேர் மட்டுமே நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. இந்த முறை ஜூன் முதல் வாரத்திலேயே பெரியாறு  வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தால் இது சாத்தியமாகி உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்பு இந்த ஆண்டு தான் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அரும்பனூர் பிட்-1, பிட்-2, சதுர்மடங்கன் மற்றும் உடுப்பங்குளத்தில் கடந்த ஆண்டு மிகவும் குறைந்த அளவில் குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்டது. 
இந்த ஆண்டும் 250 ஏக்கர் நெல் நடவாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. திருந்திய நெல் சாகுபடி முறையினால் விளைச்சல் அதிகரித்து உள்ளது. அனைத்து விவசாயிகளும் மக்காச்சோளம், சோளம் மற்றும் கம்பு உள்ளிட்ட பயிர் களுக்கு வருகிற 31- ந்தேதி வரை பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்களில் ஏதாவது ஒன்றில் பயிர் காப்பீடு செய்யலாம்.

மானியம்

மதுரை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 874.5 மில்லி மீட்டர் ஆகும். அதில் ஆகஸ்டு வரை சராசரி மழை அளவு 395.3 மி.மீ ஆகும். ஆனால் இதுவரை 463 மி.மீ. மழை பெய்துள்ளது. சுமார் 18 சதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதனால் மதுரை மாவட்ட உணவு தானிய பரப்பு இலக்கான 95 ஆயிரத்து 900 எக்டேர் மற்றும் உணவு உற்பத்தி இலக்கான 3 லட்சத்து 94 ஆயிரத்து 847 மெட்ரிக் டன்னை அடைந்து விடலாம். அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல்-228 டன், சிறுதானியங்கள்-12 டன், பயறு-21 டன், எண்ணெய் வித்து-5.35 டன், பருத்தி-4 டன் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான அளவு விதைகள் இருப்பில் உள்ளது. 
பல்வேறு அரசு மானியத்திட்டங்கள் 6 ஆயிரத்து 298 விவசாயிகளுக்கு ரூ.81 லட்சத்து 60 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகளுக்கான நீர் மேலாண்மை பயிற்சியினை கலெக்டர் அனிஷ் சேகர் தொடங்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியின்போது வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், வேளாண்மை துணை இயக்குனர்கள் சுப்புராஜ், லட்சுமி பிரபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர்கள் கமலா லட்சுமி (மதுரை மேற்கு), செல்வி (மேலூர்), நிர்மலா (தோட்டக்கலைத்துறை) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story