வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்


வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 Aug 2021 10:37 PM IST (Updated: 25 Aug 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கோவையில் உள்ள பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை

வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கோவையில் உள்ள பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சுத்தப்படுத்தும் பணிகள்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. தற்போது தமிழகத்தில் தொற்று குறைந்து வருவதால் மாநிலம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளை வருகிற 1-ந் தேதி முதல் திறக்க அரசு திட்டமிட்டு உள்ளது. 

கோவை மாவட்டத்தில் 192 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி கள், 67 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 259 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் புதர்களை வெட்டி அகற்றுதல், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  

குடிநீர்தொட்டி

பள்ளிகளில் பல மாதங்களாக குடிநீர் தொட்டிகள் பயன்படுத்தப் படாமல் உள்ளது.  இதையடுத்து அந்த தொட்டிகளை பணியாளர்கள் சுத்தப்படுத்தி குளோரின் கலந்த தண்ணீரை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும் வகுப்பறையில் ஒரு பெஞ்சுக்கு 2 மாணவர்கள் வீதம் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன. கரும்பலகைகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:- 

கொரோனா தடுப்பு வழிகள் 

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தர விட்டு உள்ளது. எனவே கொரோனா தடுப்பு வழிகள் குறித்து ஆசிரியர்களுக்கு விரிவாக எடுத்து கூறுப்பட்டு உள்ளது
மேலும் மாணவர்கள் குழுவாக அமர்ந்து சாப்பிடவோ, குழுவாக சுற்றவோ அனுமதிக்கக்கூடாது. மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் அனைவரும் எந்நேரமும் முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

சத்து மாத்திரைகள் 

மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னர் பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும் பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்க வும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story