மதுரையில் பெண்ணிடம் ரூ.95 லட்சம் மோசடி வழக்கில் தம்பதி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணிடம் ரூ.95 லட்சம் மோசடி; தம்பதி உள்பட 4 பேர் கைது
மதுரை
மதுரையில் பெண்ணிடம் ரூ.95 லட்சம் மோசடி வழக்கில் தம்பதி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண் புகார்
மதுரை பொன்மேனி டி.எஸ்.பி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கவிதா பிரியா(வயது 35). இவர் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாநகர் குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ராஜா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நான் 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் அவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை விற்று எனக்கு பணமாக கொடுத்தனர். அதில் ஒரு பகுதியை நிரந்தர வைப்பீடு செய்தது போக மீதம் ஒரு கோடி ரூபாய் எனது கையிருப்பில் வைத்திருந்தேன்.
வேலை வாங்கி தருவதாக கூறி...
எனது உறவினர்கள் கார்த்திக், முத்துலட்சுமி, அவரது மகள் நாகஜோதி, குரு கண்ணன், மீனா ஆகியோர் எனது பணத்தை மோசடி செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் என் வீட்டில் தங்கி என் குழந்தைகளை பார்த்துக் கொள்வது போல் நடித்தனர். மேலும் எனக்கும், எனது சகோதரி கணவருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி முதலில் ரூ.30 லட்சத்தை பெற்றுக் கொண்டனர்.
பின்னர் தாங்கள் ஜவுளி தொழில் செய்வதாகவும் அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்காகவும் பல தவணைகளில் ரூ.65 லட்சம் வாங்கினார். பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
4 பேர் கைது
இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். மேலும் நான் பணத்தை திருப்பி கேட்டபோது, அவர்கள் என்னையும், எனது 2 பெண் குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.
எனவே அவர்களிடம் இருந்து தனக்குரிய ரூ.95 லட்சத்தை பெற்றுத் தர வேண்டும். மோசடி செய்த முத்துலட்சுமி, அவரது கணவர் கார்த்திக், மகள் நாகஜோதி, மருமகன் குரு கண்ணன், மீனா ஆகியோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதுகுறித்து மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கார்த்திக், அவரது மனைவி முத்துலட்சுமி, மகள் நாகஜோதி, உறவினர் மீனா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குருகண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story