தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது
மதுரை
மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை கடுமையாக இருந்த நிலையில், தற்போது பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, தடுப்பூசி தான். தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசும் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
மதுரை நகர் பகுதியில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் தினமும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதுபோல், அரசு ஆஸ்பத்திரிக்கான கொரோனா தடுப்பூசி மையமான இளங்கோ மாநகராட்சி பள்ளியில் 24 மணி நேரமும் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி முகாம்களில் மக்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக கூட்டம் கூட்டமாக வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தடுப்பூசி தட்டுப்பாடுகள் இருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். ஆனால், தற்போது தடுப்பூசிகள் தட்டுப்பாடில்லாமல் வழங்கப்படுவதால் அனைத்து மையங்களிலும் பொதுக்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
10 லட்சம்
அதன்படி, மதுரை மாவட்டத்தில் நேற்றும் பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. அதிலும் ஆர்வத்துடன் பலர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன்படி நேற்று மட்டும் 14 ஆயிரத்து 270 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியையே அதிக அளவில் செலுத்தி இருக்கிறார்கள். நேற்று மாலை நிலவரப்படி மதுரையில் இதுவரை 9 லட்சத்து 85 ஆயிரத்து 136 பேருக்கு செலுத்தப்பட்டு, 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. மக்களுக்கு தங்கு தடை இன்றி தடுப்பூசிகள் வினியோகிக்கும் வகையில் 27 ஆயிரத்து 450 தடுப்பூசிகள் கையிருப்பு மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரையில் அதிக அளவில் மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். அதன் விளைவாகவே இவ்வளவு சீக்கிரமாக 10 லட்சத்தை எட்ட முடிந்துள்ளது. மீதம் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கபட்டு வருகிறது.
மேலும் மதுரை மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் நடந்த ஏற்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story






