13 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
13 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
கோவை
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் வாளையார் உள்பட 13 சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. உரிய ஆவணம் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பாதிப்பு பெரும்பாலான மாநிலங்களில் குறைந்து விட்டது. தமிழகத்திலும் தொற்று பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
ஆனாலும் கொரோனா பாதித்த முதல் மாநிலமான கேரளாவில் மட்டும் நாளுக்குநாள் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அங்கு ஓணம் பண்டிகைக்கு கூடுதலாக தளர்வு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது கடந்த 3 மாதங்களில் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
தீவிர கண்காணிப்பு
இந்தநிலையில் கேரள மாநிலத்தின் எல்லை பகுதியில் கோவை உள்ளது. எனவே இங்கு தொற்று பரவாமல் தடுக்க கோவை மாவட்டத் தையொட்டி தமிழக- கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
எனவே கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், 2 டோஸ் தடுப்பூசி போட்டதற் கான சான்றிதழ்,
இ- பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
ஆவணங்கள்
மேலும் உரிய சான்றிதழ் இல்லாமல் வந்தவர்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதோடு உரிய சான்றிதழ்கள் வைத்துக் கொண்டு வாகனங்களில் சமூக இடைவெளி இன்றி வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
போலீசாருடன், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
அதோடு மருத்துவ முகாம்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இதேபோன்று கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களை கண்காணிக்க 13 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story