கப்பலூர் சுங்கச்சாவடி அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டுவதை கண்டித்து போராட்டம்


கப்பலூர் சுங்கச்சாவடி அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டுவதை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2021 2:01 AM IST (Updated: 27 Aug 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருமங்கலம்
திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சுங்கச்சாவடி
திருமங்கலம் அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி மூலம் அடிக்கடி பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டுள்ளன. விதிமுறைக்கு மீறி சுங்கச்சாவடி அமைந்துள்ளது, உள்ளூர் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அடிக்கடி  இந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடி ஊழியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 
இந்த அலுவலகம் கப்பலூர் ஊராட்சிக்கு சொந்தமான நீர் ஓடை புறம்போக்கு நிலம் ஆகும். இந்த நிலத்தில் தற்காலிக செட் அமைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். கப்பலூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக இந்த இடத்தில் நிரந்தரமாக கட்டிடம் கட்ட கூடாது என ஏற்கனவே முறையீடு செய்யப்பட்டிருந்தது. 
நிரந்தர கட்டிடம்
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், திருமங்கலம் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென ஓடை பகுதியில் இருந்த 3 மரங்களை அகற்றிவிட்டு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டினர். இந்தத் தகவல் ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியவந்தது. 
இதனால் கப்பலூரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர கட்டிடம் கட்டக் கூடாது என ஏற்கனவே தெரிவித்திருந்தோம். தற்போது பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தெரியாமல் கட்டிடம் கட்டத் தொடங்கி உள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். 
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி மற்றும் போலீசார் அங்கு சென்று சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
முறைப்படி நிலம் யாருக்குச் சொந்தமானது என ஆவணங்களை இரு தரப்பினரும் கொடுக்க வேண்டும் எனக் கூறியதுடன், இதுதொடர்பாக தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின் வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.    
1 More update

Next Story