பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கோவை
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேலும் 4 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
மிரட்டி பணம் பறிப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை ஒரு கும்பல் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தனர்.
இந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, பொள்ளாச்சி அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
விரைந்து முடிக்க உத்தரவு
இதனிடையே இந்த வழக்கில் சிறையில் உள்ள அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் தினமும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மகளிர் கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தனர்.
அதில் அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு, அருண்குமார் ஆகிய 4 பேரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது. இதன் நகல்கள் விரைவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப் பட உள்ளது.
சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story