ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கோத்தகிரியில் கைது


ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கோத்தகிரியில் கைது
x
தினத்தந்தி 27 Aug 2021 8:29 PM GMT (Updated: 2021-08-28T01:59:37+05:30)

மதுரையில் ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் வசந்தியும், அவருடைய தம்பியும் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை,

மதுரையில் ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் வசந்தியும், அவருடைய தம்பியும் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூ.10 லட்சம் பறிப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷத் (வயது 36). டெய்லரான இவர், சொந்தமாக பேக் கம்பெனி வைக்க முடிவு செய்தார். இதற்கான பொருட்கள் வாங்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கினார்.
கடந்த மாதம் 5-ந்தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ஒருவரிடம் மேலும் கடன் வாங்க மதுரை-தேனி ரோட்டில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மாவுமில் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தார். அப்போது, ஏற்கனவே வாங்கிய கடன் ரூ.10 லட்சத்தையும் கையில் வைத்திருந்தார்.
இந்தநிலையி்ல அங்கு போலீஸ் வாகனத்தில் வந்த மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடைய தம்பி பாண்டியராஜன், மற்றும் பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் அர்ஷத்ைத மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பையோடு பறித்துச்சென்றனர்.

தலைமறைவு

இதுகுறித்து அர்ஷத், கடந்த மாதம் 27-ந்தேதி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். பின்னர் இந்த புகார் மீதான விசாரணை மாவட்ட குற்ற தடுப்புப்பிரிவு ேபாலீசுக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அன்றைய தினமே வசந்தியை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவு பிறப்பித்தார்.
உடனே வசந்தி தலைமறைவானார். இந்த வழக்கை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி வசந்தி, மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இது ஒரு புறம் இருக்க கடந்த 13-ந்தேதி இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரில் பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகிய 3 பேரை துணை சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி தலைமையிலான தனிப்படை பிடித்து கைது செய்தது. அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் மீட்கப்பட்டது.
கோத்தகிரியில் ைகது
முன்ஜாமீன் கேட்டு இருந்த இன்ஸ்பெக்டர் வசந்தியின் மனுவை மதுரை ஐகோர்ட்டு சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தததுடன் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என கேள்வியும் எழுப்பியது. இதனால் வசந்தியை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, அவரது செல்போன் அழைப்புகளை கண்காணித்தனர். அவரும் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்தாமல் வேறு, வேறு எண்களில் இருந்து உறவினர்களை தொடர்பு கொண்டு வந்ததால் போலீசாருக்கு குழப்பமும் ஏற்பட்டது.
இறுதியில் நீலகிரி மாவட்டத்தில் வசந்தி பதுங்கி இருப்பதை தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தி அங்கு சென்றனர். ரகசியமாக கண்காணித்ததில் கோத்தகிரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு லாட்ஜில் இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடைய தம்பி பாண்டியராஜன் இருப்பதை தெரிந்துகொண்டனர்.
நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசாரும், நீலகிரி மாவட்ட போலீசாரும் இணைந்து, திடீரென அந்த லாட்ஜூக்குள் புகுந்து, இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடைய தம்பி பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்தனர். சிறிது நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மருத்துவ பரிசோதனை

இரவோடு இரவாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வசந்தி, பாண்டியராஜன் ஆகியோர் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று காலை 7 மணி அளவில் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் சுமார் 4 மணி நேரம் அவர்களை ஆஸ்பத்திரியிலேயே வைத்திருந்தனர்.
அதே நேரத்தில் வசந்தியை படம் எடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்தனர். எனவே அவரது முகத்தை மறைத்து ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை மாவட்ட கூடுதல் மகளிர் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அதன்பின்னர் அவரையும், அவருடைய தம்பியையும், நீதிபதி அனுராதா முன்பு ஆஜர்படுத்தினர். வருகிற 9-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிளைச்சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

போலீஸ் அதிகாரி விளக்கம்
வசந்தி சிக்கியது எப்படி? என்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அர்ஷத்திடம் இன்ஸ்பெக்டர் வசந்தி ரூ.10 லட்சத்தை பறித்துள்ளார். ஆனால் அர்ஷத் முறைகேடான வழியில் அந்த பணத்தை இரட்டிப்பு செய்ய வேண்டும் என நினைத்து ெகாண்டு வந்ததாகவும், இதை தெரிந்துதான் வசந்தி அங்கு சென்று அதனை பறித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முறைகேடான பணபரிவர்த்தனைக்கு ரூ.10 லட்சத்தை எடுத்து வந்ததால் அர்ஷத் போலீசிடம் செல்லமாட்டார் என்ற நம்பிக்கையில்தான் இந்த துணிகர பணப்பறிப்பை வசந்தி செய்துள்ளார். ஆனால், அர்ஷத் நேராக போலீஸ் சூப்பிரண்டிடம் சென்று முறையிட்டு, சம்பவத்தை விளக்கியதால் வசந்தி மீதான பிடி இறுகி, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story