காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் இலவச கொரோனா தடுப்பூசி; கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
2 தவணை தடுப்பூசிகள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு தற்போது கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. கொரோனா நோய்த்தொற்று மீண்டும் பரவாமல் இருக்க அரசால் அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகள் தீவிரமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும் ஒவ்வொரு தனி நபரும் கொரோனா நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நமக்குள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. நமது மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு ஆரம்பித்து 60 வயதுக்கு மேற்பட்டோர். 18 வயதிற்கு மேற்பட்டோர் என படிப்படியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றாநோய் பாதிப்புடையோர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 1,824 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 2 தவணைகளும் செலுத்தி கொண்டவர்கள் 50 ஆயிரத்து 146 பேர் ஆவர். கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 2 தவணை தடுப்பூசிகள் போட்டு கொண்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே 90 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முதல் தவணை தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவான அளவிலேயே கிடைக்கும். எனவே அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
24 மணி நேரமும்...
அரசு உத்தரவின்படி கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்ளவேண்டும்.தற்சமயம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே முதல் தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆரம்ப சுகாதாரநிலையம் அல்லது சிறப்பு மருத்துவ முகாம்களில் தவறாமல் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். பொதுமக்களின் வசதிக்கேற்ப தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் அனைத்து நாட்களிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு தடுப்பூசி முகாம்கள்
பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட பஸ் நிலையங்கள், காய்கறி சந்தைகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். மேற்படி தடுப்பூசி செலுத்தப்படும் சிறப்பு முகாம்களின் விவரங்களை மாவட்ட இணையதளமான www.kancheepuram.nic.in மற்றும் மாவட்ட கலெக்டரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான @kanchicollector மற்றும் முகநூல் பக்கமான District Collector Kancheepuram போன்றவற்றில் வெளியிடப்படுகிறது.
பொதுமக்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2 தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முக கவசம் அணிந்து வெளியே செல்லுமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story