தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
கோவை
கோவையில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தெருநாய்கள்
கோவை நகரில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில், ஒவ்வொரு வார்டிலும் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் திரிந்து வருகின்றன. அந்த வகையில் மாநகர பகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தெருநாய் கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சி மற்றும் உணவு கழிவுகளை நாய்கள் தின்று ஆக்ரோஷமாக சுற்றி வருகின்றன. இரவில் பணி முடிந்து வீடு திரும்புபவர்களை தெருநாய்கள் விரட்டி, விரட்டி கடித்து குதறி வருகின்றன.
பாதிப்பு அதிகம்
தெருநாய்கள் கடித்தால் ரேபிஸ் பாதிப்பு ஏற்படும். கடந்த ஆண்டு மட்டும் கோவை நகரில் தெருநாய் கடித்து 12 வயதுக்கு கீழ் உள்ள 350 குழந்தைகளுக்கும், சாதாரண காயத்துக்காக 150 குழந்தைகளுக்கும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
அது போல் இந்த ஆண்டும் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கடிக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாய் கடித்த 6 மணி நேரத்துக்குள் இம்யுனோகுளோபுளின் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
கருத்தடை மையங்கள்
கோவை நகரின் மேற்கு, வடக்கு மண்டலங்களை உள்ளடக்கிய 40 வார்டுகளில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு சீரநாயக்கன்பாளையத் தில் உள்ள மையத்தில் கருத்தடை செய்யப்பட்டு வருகிறது.
ஒண்டிப் புதூரில் புதிதாக கருத்தடை மையம் அமைக்கப்பட்டது. அது இன்னும் செயல்படவில்லை. உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகில் அமைக்கப் பட்ட கருத்தடை மையம் மூடிக்கிடக்கிறது.
கோவையில் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி கடந்த 5 ஆண்டுகளில் பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
அவை சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் நாய்கள் துரத்தும் போது வேகமாக சென்று கீழே விழுந்து காயம் அடைபவர்களும் அதிகமாக உள்ளனர்.
சிகிச்சை வசதி
தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி சார்பில் தெருநாய்களுக்கான கருத்தடை மையங்கள் உள்ளன. ஆனால் அவை செயல்படாமல் உள்ளது.
இதனால் நாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
நாய்கள் கடித்து பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை பெறவும் போதிய வசதி இல்லை. இதனால் நாய்க்கடிக்கு மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
எனவே தெருநாய்களின் தொல்லையில் இருந்து மக்களை காக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை செய்யும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story