பொள்ளாச்சியில் போக்சோவில் இளம்பெண் கைது


பொள்ளாச்சியில் போக்சோவில் இளம்பெண் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 4:13 PM GMT (Updated: 2021-08-29T21:43:49+05:30)

பொள்ளாச்சியில் போக்சோவில் இளம்பெண் கைது

பொள்ளாச்சி

சிறுவனை கடத்தி திருமணம் செய்ததாக இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுவனுடன் காதல்

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பெட்ரோல் பங்கிற்கு 17 வயது சிறுவன் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அடிக்கடி வந்ததாக தெரிகிறது. 

இதன் காரணமாக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அந்த சிறுவனும், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த 26-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினான். இந்த நிலையில் சிறுவன் காணாமல் போனதால் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம்பெண் ஒருவர் சிறுவனை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.

போக்சோவில் கைது

மேலும் கோவை செம்மேடு பகுதியில் இருவரும் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சிறுவனையும், இளம்பெண்ணையும் மீட்டு பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர். 

பின்னர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவனை, இளம்பெண் திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

 மேலும் சிறுவனை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அந்த பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவையில் முதல் முறையாக...

பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஒரு மாதமாக போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்கில் சிறுவர்கள், வாலிபர்கள் கைதாகி உள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஒரு பெண் போக்சோ சட்டத்தில் கைதாகி இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story