ஆழியாறு தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆழியாறு தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி
தடை உத்தரவை மீறி ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஆழியாறு தடுப்பணை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மற்றும் பூங்கா சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இங்கு விடுமுறை நாட்களில் கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.இந்த நிலையில் நேற்றும், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று (திங்கட்கிழமையும்) ஆழியாறு அணை மற்றும் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அணை, பூங்கா நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டன. மேலும் வால்பாறைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆபத்தை உணராமல் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
ஆழியாறு அணைக்கு வந்தவர்கள் தங்களது வாகனங்களை வால்பாறை சாலையில் தாறுமாறாக நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளும், போலீசாரும் அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கொரோனா பரவும் அபாயம்
ஆழியாறு தடுப்பணை சேறு, சகதி நிறைந்தது. மேலும் சுழலும் உள்ளது. தற்போது பாசனத்திற்கும், மின் உற்பத்தி நிலையம் வழியாகவும் தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஏற்கனவே தடுப்பணையில் மூழ்கி பலர் இறந்து உள்ளனர்.
இதன் காரணமாக தடுப்பணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகள் தடையை மீறி தடுப்பணையில் குளித்தனர். அருகில் பொதுப்பணித்துறை அலுவலகம், போலீஸ் நிலையம் இருந்தும் சுற்றுலா பயணிகளை அங்கு செல்ல விடாமல் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
மேலும் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கூட்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story