வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடி வெறிச்சோடியது
வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடி வெறிச்சோடியது
கிணத்துக்கடவு
கேரளாவில் முழு அடைப்பு காரணமாக வீரப்ப கவுண்டனூர் சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா பரவல் அதிகரிப்பு
கொரோனா பரவல் 2-வது அலையின் காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வந்தததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கேரளா தவிர கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல், ஓணம் பண்டியையொட்டி அமல்படுத்தப்பட்ட தளர்வுக்கு பின்னர் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருவதற்கு இ-பாஸ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர், வருவாய்ததுறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் இ-பாஸ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுதற்கான ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் போலீசார் அனுமதித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி வருவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
சோதனைச்சாவடி வெறிச்சோடியது
கிணத்துக்கடவு வழியாக கேரளாவுக்கு செல்ல 3 சாலைகள் உள்ளன. இதில் ரங்கேகவுண்டன்புதூர், சின்னாகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் அடைக்கப்பட்டன. இதனால் பெரும்பாலான வாகனங்கள் வீரப்ப கவுண்டனூர் போலீஸ் சோதனைச்சாவடி வழியாக சென்று வந்தன.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நேற்று கேரள-தமிழக எல்லையில் உள்ள வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆனாலும் சோதனைச்சாவடியில் கிணத்துக்கடவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில், அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்ற வாகனங்கள் வந்து சென்றன.
தடுப்பூசி
இதுகுறித்து கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா கூறியதாவது:-
கேரள மாநில எல்லையில் கிணத்துக்கடவு தாலுகா உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள விதிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறோம்.
கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்கள் மற்றும் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றுகளை காண்பித்தால் மட்டுமே கிணத்துக்கடவு பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் உள்ள கிணத்துக்கடவு தாலுகா உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story