பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேர் மீட்பு
பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேர் மீட்பு
மேட்டுப்பாளையம்
பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேரை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
குளிக்க சென்றனர்
மதுரையை சேர்ந்தவர்கள் சுந்தரமூர்த்தி (வயது 25), அழகர்சாமி (30), சக்திவேல் (27), பகவதி (32). இவர்கள் 4 பேரும் எலெக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர்கள் 4 பேரும் மேட்டுப்பாளையம் ஓடந்துறை பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.
அப்போது ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவு ஓடிக்கொண்டு இருந்தது. இதனால் அவர்கள் 4 பேரும் ஆற்றுப் பாலத்திற்கு கீழே மேடான மண்திட்டு அருகே நின்று குளித்துக்கொண்டு இருந்தனர்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
அந்த மண்திட்டின் இருபுறமும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றில் தண்ணீர் வரும் அளவு திடீரென்று கூடியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கரைக்கு வர முயன்றனர். ஆனால் தண்ணீர் வரும் வேகம் அதிகமாக இருந்தால் மண்திட்டின் நடுவில் நின்று கொண்டனர்.
ஆற்று வெள்ளத்துக்கு நடுவே சிக்கிக் கொண்டதால் அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
அதை கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அவர்கள், கயிறு கட்டிக் கொண்டு ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டு பகுதிக்கு சென்றனர்.இதையடுத்து ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த 4 பேருக்கும் லைப்- ஜாக்கெட் கொடுத்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி 4 பேரையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் மேட்டுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story