மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரி


மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரி
x
தினத்தந்தி 29 Aug 2021 8:31 PM GMT (Updated: 2021-08-30T02:01:31+05:30)

மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மதுரை,

மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

21 ஏக்கர்

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கலெக்டர் அனிஷ் சேகர், கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் படகில் சவாரி செய்தனர்.
பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
மாரியம்மன் கோவில் அருகில் 21 ஏக்கர் பரப்பளவில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மைய மண்டபத்துடன் தெப்பக்குளம் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் தண்ணீர் இல்லாமல் இளைஞர்களின் விளையாட்டு மைதானமாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு வருவதற்கான நீர்வரத்து வாய்கால் தூர்வாரப்பட்டு நேரடியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

சுற்றுலா தலம்

கடந்த 10 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வற்றா நிலையில் தெப்பக்குளத்தை காணும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நான் என்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்கும் போது 60 அடி நீளமுள்ள படகுகளை இதில் செலுத்தியிருக்கிற அனுபவம் எனக்கு உண்டு. இதனை சுற்றுலா தலமாக மாற்றி மாநகராட்சிக்கு வருமானம் வரும் வகையில் திட்டங்களை செயல்படுத்தப்படும். படகில் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு உயிர் காப்பு மிதவை, மேலாடை மற்றும் நீச்சல் தெரிந்த வீரர்களும் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வளர்ச்சி திட்ட பணிகள்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய தொகுதிக்கு உட்பட்ட சப்பாணி கோவில் தெரு பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை, ஆதிமூலம் பிள்ளை தெருவில் ரூ.4.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை, அமெரிக்கன் மிஷன் சர்ச் தெருவில் ரூ.9.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை, இம்மையில் நன்மை தருவார் கோவில் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடம், 11-வது வார்டு புட்டுத்தோப்பு காட்டு நாயக்கன் தோப்பு பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடம் என மொத்தம் ரூ.40.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Next Story