பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Aug 2021 10:45 PM GMT (Updated: 29 Aug 2021 10:45 PM GMT)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.67 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 617 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 821 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.75 அடியாக அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் பவானி ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்கள் பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளுக்கு சென்று பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியை மேற்கொண்டனர். ‘பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து எந்த நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுங்கள்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story