சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வியாபாரி கைது


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வியாபாரி கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 2:43 PM IST (Updated: 30 Aug 2021 2:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னை டி.பி.சத்திரத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த கள்ளக்காதலி மற்றும் அவரது தங்கையும் சிக்கினர்.

சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை
சென்னை டி.பி.சத்திரம் அண்ணாநகர் கிழக்கு ஆர்.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). இவர் அப்பகுதியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அருகில் உள்ள தெருவை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் கடந்த ஓராண்டாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. பெருமாள் அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவிப்பதற்காக அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பெருமாளின் பார்வை அந்த பெண்ணின் 9 வயது மகள் மீது திரும்பி உள்ளது. இதையடுத்து கள்ளக்காதலிக்கு பண ஆசைக்காட்டியும், மிரட்டியும் அவரது ஒப்புதலோடு அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் பெருமாள், அந்த சிறுமியின் வீட்டுக்கு விளையாடுவதற்கு வந்த 11 வயது சிறுமி மற்றும் 4 வயது பெண் குழந்தையுடனும் அத்துமீறி உள்ளார்.

செல்போன் வீடியோ...
இந்த கொடூர சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார். பெருமாள், அவருடைய கள்ளக்காதலியை பிடித்து, போலீஸ்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.இதில், பெருமாள் தனது கள்ளக்காதலியின் 9 வயது மகளிடம் 6 மாதங்களாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருப்பதும், அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து ரசித்து வந்ததும் தெரிய வந்தது.

‘போக்சோ’ சட்டத்தில் கைது
இதையடுத்து காமக்கொடூரன் பெருமாளை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பெற்ற மகள் என்றும் பாராமல் கள்ளக்காதலனின் காமபசிக்கு இரையாக்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 28 வயதுடைய அந்த பெண்ணின் சகோதரியும் உடந்தையாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story