நூதனமுறையில் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் ‘அபேஸ்'
நூதனமுறையில் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினீயர்
தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 31). இவர் சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இவர், தனது செல்போனில் உள்ள செயலிகளை பயன்படுத்தி ‘மொபல் பேங்க்’ வசதி மூலம் அவ்வப்போது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி வந்துள்ளார். அந்த வகையில் கடந்த 23-ந் தேதி அவரது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியில் ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை பாபு தொட்டவுடன் அவருக்கு மற்றொரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.4.11 லட்சம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறி புகார் தெரிவித்தார்.
சைபர் கிரைம் போலீசார்
மேலும், தனது வங்கி கணக்கை முடக்க கூறினார். பின்னர் கடந்த 24-ந் தேதி ஆன்லைன் மூலம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்தார். அந்த புகார் தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் பாதிக்கப்பட்ட பாபுவை அழைத்து பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பாபு நேற்றுமுன்தினம் இரவு பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றி மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராணி (45). இவர் 150-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2.63 லட்சம் வரை மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று ராணியை பிடித்து சேலையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story