பொள்ளாச்சியில் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம்
பொள்ளாச்சியில் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம்
பொள்ளாச்சி
விலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன.
தோப்புகளில் இருப்பு வைப்பு
பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலை நம்பி விவசாயிகள் மட்டுமின்றி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சியில் இருந்து கண்டெய்னர்கள் மூலம் கேரளா மாநிலம் கொச்சிக்கு தேங்காய்களை கொண்டு சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேங்காய் கிலோ ரூ.40 வரை விலைபோனது. இதன் காரணமாக இந்த ஆண்டும் தேங்காய் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள், வியாபாரிகள் தேங்காய்களை இருப்பு வைத்தனர்.
ஆனால் எதிர்பார்த்ததை விட தேங்காய் விற்பனை குறைந்தது. இதனால் போதிய விலை கிடைக்காததால் தென்னந்தோப்புகளில் தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-
விற்பனை இல்லை
பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்து வாரந்தோறும் 30 கண்டெய்னர்களில் 900 டன் கொச்சி துறைமுகத்துக்கு தேங்காய் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து துபாய்க்கு கப்பல் மூலம் தேங்காய் ஏற்றுமதி ஆகிறது. இதைதவிர தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த கொரோனா பரவல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது செப்டம்பர் மாதம் தேங்காய் கிலோவுக்கு ரூ.40 வரை விலை போனது. இந்த ஆண்டும் ஜூன் மாதம் வரை ஊரடங்கு அமலில் இருந்தது.
இதனால் இந்த ஆண்டும் விலை உயரும் என்று விவசாயிகளும், வியாபாரிகளும் தோப்புகளில் தேங்காய்களை இருப்பு வைத்தனர். ஆனால் எதிர்பார்த்த விற்பனை நடைபெறவில்லை.
தேங்காய்கள் தேக்கம்
துபாயில் வசிக்கும் கேரள மக்கள் கொரோனா காரணமாக ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு வந்து விட்டனர். இதனால் துபாய்க்கு தேங்காய் ஏற்றுமதி குறைந்து விட்டது. 900 டன் சென்ற நிலையில் தற்போது 300 டன் தேங்காய் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்கிடையில் தேங்காய் வரத்து குறைவாக இருப்பதால் ஓணம் பண்டிகையின் போது விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேங்காய் விற்பனை குறைந்ததால் விலையும் குறைந்து விட்டது.
தற்போது பச்சை தேங்காய் கிலோவுக்கு ரூ.28, கருப்பு நிற தேங்காய் ரூ.29-க்கும் விற்பனை ஆகிறது. இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில 3 கோடி தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன.
சில இடங்களில் 4 மாதங்களுக்கு மேலாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் முளைத்து தென்னங்கன்றுகள் வளர தொடங்கி விட்டது. விநாயகர் சதுர்த்திக்கு தேங்காய் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story