பவானிசாகர் அணை பூங்கா அருகே முட்புதர் காட்டில் முகாமிட்ட யானைகள்; பொதுமக்கள் அச்சம்


பவானிசாகர் அணை பூங்கா அருகே முட்புதர் காட்டில் முகாமிட்ட யானைகள்; பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 30 Aug 2021 8:28 PM GMT (Updated: 30 Aug 2021 8:28 PM GMT)

பவானிசாகர் அணை பூங்கா அருகே முட்புதர் காட்டில் முகாமிட்ட காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பவானிசாகர்
பவானிசாகர் அணை பூங்கா அருகே முட்புதர் காட்டில் முகாமிட்ட காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
5 காட்டு யானைகள் 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி பவானிசாகர் அணை பகுதிக்கு வருவது வழக்கம். 
இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டு யானைகள் புங்கார் கிராமம் வழியாக பவானி ஆற்றை கடந்து பவானிசாகர் அணை பூங்கா எதிர்புறம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான முட்புதர் காட்டில் முகாமிட்டன. 
பொதுமக்கள் அச்சம்
அந்த பகுதி மக்கள் இதுபற்றி விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் பவானிசாகர் அணை பூங்கா பகுதிக்கு சென்று அந்த பகுதியில் முகாமிட்டு உள்ள யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். யானைகள் முகாமிட்டுள்ள முட்புதர் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்க செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம்    அறிவுறுத்தி உள்ளனர். 
காட்டு யானைகள் பவானிசாகர் அணை பூங்கா அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளதால் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 பகலில் முட்புதர் காட்டில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் மீண்டும் இரவில் அப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதிக்கு சென்று விடும் என்பதால் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story