தாளவாடி அருகே பரபரப்பு டிரைவரை கொன்ற விவசாயி கைது; சம்பள பாக்கியை கேட்டதால் ஆத்திரம்
தாளவாடி அருகே டிரைவரை கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். சம்பள பாக்கியை கேட்டதால் ஆத்திரம் அடைந்து கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தாளவாடி
தாளவாடி அருகே டிரைவரை கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். சம்பள பாக்கியை கேட்டதால் ஆத்திரம் அடைந்து கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிணமாக கிடந்தார்
தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது 40). இவர் நெய்தாளபுரத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் (48) என்பவரிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சித்தப்பாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த நிலையில் அவர் நெய்தாளபுரம் வனப்பகுதி ரோட்டோரத்தில் கடந்த 28-ந் தேதி ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் முருகேசனை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை செய்தவர் கைது
விசாரணையில் சித்தப்பாவை முருகேசன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
சித்தப்பா என்னிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மதுபோதையில் அவர் என்னிடம் வந்து சம்பள பாக்கியை கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை பிடித்து கீழே தள்ளினேன். இதில் நிலைதடுமாறி அவர் கீழே இருந்த கல் மீது விழுந்தார்.
ரோட்டோரம் வீசினேன்
இதில் படுகாயம் அடைந்த சித்தப்பா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் கொலையை மறைக்க திட்டமிட்டேன். சித்தப்பாவின் உடலை எடுத்து டிராக்டரில் போட்டுக்கொண்டு வனப்பகுதிக்கு சென்றேன். பின்னர் அங்கு ரோட்டோரம் அவரது உடலை வீசி கீழே விழுந்து இறந்தது போல் மாற்றிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story