டிராவல்ஸ் அதிபரை கடத்திய 5 பேர் கைது


டிராவல்ஸ் அதிபரை கடத்திய 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 4:45 PM IST (Updated: 31 Aug 2021 4:45 PM IST)
t-max-icont-min-icon

டிராவல்ஸ் அதிபரை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

குடும்பத்தகராறு
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் கிராமம், கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 28). இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இங்கு சுங்குவார்சத்திரத்தை சேர்ந்த ஜீவா டிரைவராக வேலை செய்து வருகிறார்.ஜீவாவின் தங்கையான திவ்யாவுக்கும் கரசங்காலை சேர்ந்த கோபி என்ற கோபிநாத் (31) என்பவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திவ்யாவுக்கும், கோபிநாத்துக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ஜீவா 2 மாதங்களுக்கு முன்னர் திவ்யாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.

கடத்தல்
கடந்த 28-ந்தேதி கோபிநாத் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு ஜீவா பணிபுரியும் கங்குவார்சத்திரத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்று அங்கிருந்த அப்துல் ரகுமான் மற்றும் அவரது நண்பர் முகமது அன்சாரி ஆகியோரிடம் ஜீவா மற்றும் திவ்யா எங்கே என கேட்டு இருவரையும் மிரட்டி தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர். இது குறித்து அப்துல் ரகுமானின் தாய் பர்கத்பீ சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கைது
போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் போலீசாரை கண்டதும் வேகமாக சென்றது. போலீசார் அந்த காரை துரத்தி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த காரில் அப்துல் ரகுமான் மற்றும் முகமது அன்சாரி இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டு கடத்தலில் ஈடுபட்ட கோபிநாத் மற்றும் அவரது நண்பர்களான ஜானகி என்ற ஜானகிராமன் (28), சுதாகரன் (28), திவாகர் (27) சத்யா(27) ஆகியோரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story