பயிற்சி டாக்டரை 2 வது நாளாக தேடும் பணி தீவிரம்
வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பயிற்சி டாக்டரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வால்பாறை
வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பயிற்சி டாக்டரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பயிற்சி டாக்டர்
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டராக இருந்தார். இவர் தனது நண்பர் கள் 4 பேருடன் சேர்ந்து வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர்.
பின்னர் அவர்கள் சோலையாறு அணைப்பகுதிக்கு சென்றனர். தற்போது சோலையாறு அணை நிரம்பி உள்ளதால், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது. அந்த ஆற்றில் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது.
தண்ணீர் அடித்து சென்றது
அங்கு சென்ற ஸ்ரீராம் உள்பட 5 பேரும் நீர்வீழ்ச்சியை பார்த்த போது அதில் குளிக்க அவர்களுக்கு ஆசை ஏற்பட்டது. இதை யடுத்து அவர்கள் அங்கு குளித்தனர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஸ்ரீராம் திடீரென்று தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த வால்பாறை தீயணைப்புத்துறையினர், சேக்கல்முடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஸ்ரீராமை தேடினார்கள். ஆனால் இருள்சூழ தொடங்கியதால், தேடும் பணி கைவிடப்பட்டது.
2-வது நாளாக தேடும் பணி
தொடர்ந்து 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. இன்ஸ்பெக்டர் கற்பகம், தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ், மானாம்பள்ளி வனச்சரக அதிகாரி மணிகண்டன் ஆகியோர் தலைமையில் போலீசார், வனம் மற்றும் தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் ஸ்ரீராமின் பெற்றோர் மற்றும் நண்பர்களும் அங்கு விரைந்தனர். ட்ரோன் உதவியுடன் தேடும் பணி நடந்தது. அதுபோன்று தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பெற்றோர் அழைத்தனர்
இந்த நிலையில் தங்கள் மகனுக்கு நீச்சல் நன்றாக தெரியும் என்பதால், ஆற்றில் இருந்து வெளியே வந்து வனப்பகுதியில் சிக்கி தவிக்க வாய்ப்பு உள்ளது.
நாங்கள் கூப்பிட்டால் நிச்சயம் வருவன், எனவே ஒலிப்பெருக்கி வசதி ஏற்படுத்தி தரும்படி பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அங்கு ஒலிப்பெருக்கி வசதி ஏற்படுத்தப்பட்டது.
அதன் மூலம் பெற்றோர் 2 மணி நேரம் ஸ்ரீராம் என்று அழைத்தனர். அதிலும் பயன் இல்லை. எனவே தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.
தண்ணீர் வேகம் அதிகம்
இது குறித்து தீயணைப்புத்துறையினர் கூறும்போது, சோலை யாறு அணையில் சேடல்டேம் வழியாக ஆற்றில் செல்லும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கிறது. எனவே பாறை இடுக்கில் உடல் சிக்கி இருந்தால் 3-வது நாளில் வெளியே வந்து விடும். இருந்தபோதிலும் தீவிரமாக தேடி வருகிறோம் என்றனர்.
இதற்கிடையே மாலை 5.30 மணி வரை தேடும் பணி நடந்தது. அதன் பின்னர் இருள்சூழ தொடங்கியதால், தேடும் பணி நிறுத்தப்பட்டது.மீண்டும் தேடும் பணி தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story