நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை


நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை
x
நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை
தினத்தந்தி 31 Aug 2021 10:15 PM IST (Updated: 31 Aug 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை

கோவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருப்பதி நகரில் மாஷே குரூப் ஆப் டெக்னாலஜி  என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தை திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 27). ஓசூரை சேர்ந்த புகழேந்தி (35) ஆகியோர் கடந்த 2000-ம் ஆண்டில் தொடங்கினர்.

இதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் பாபு, சுகதேவன், ஹேமலதா, பர்வீன் ராஜ் ஆகியோர் ஊழியராக வேலை பார்த்தனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 நாளில் பணம் இரட்டிப்பு தருவதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 86 பேர் பணம் செலுத்தினர்.

இந்த நிலையில்அவர்களிடம் ரூ.4 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 62 பணத்தை பெற்று திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது.

 சாட்சிகள் விசாரணை நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி நிதி நிறுவனத்தை நடத்தி வந்த புகழேந்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.2 கோடியே 76 லட்சம் அபராதம் விதித்தார். ரூ.2 கோடியே 75 லட்சத்தை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க உத்தரவிட்டார். 

தீர்ப்பு கூறப்பட்ட நாளான நேற்று புகழேந்தி கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராஜா தலைமறைவாக உள்ள நிலையில் புகழேந்திக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மீது போதிய சாட்சியங்கள் இல்லாததால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story