திருவாரூர் மாவட்டத்தில் 220 பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளை கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்


திருவாரூர் மாவட்டத்தில் 220 பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளை கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 31 Aug 2021 6:07 PM GMT (Updated: 31 Aug 2021 6:07 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 220 பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வகுப்பறைகள் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்,

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் நோய் தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் நாளை(புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிட்டது.

இதில் 9, 10, 11,12 ஆகிய வகுப்புகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்கள், 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பல்வேறு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சுகாதாரத்துறையினர், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து சிறப்பு முகாமை நடத்தி தடுப்பூசி போடும் பணியில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

சமூக இடைவெளியுடன் சாப்பிட வேண்டும்

பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவீதம் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரும் நிலையில் சுழற்சி முறையில் பாட வகுப்புகள் நடத்திடவும், வகுப்பறையில் மாணவர்கள் உரிய இடைவெளியுடன் உட்கார்ந்து பாடம் கற்கின்ற வகையில் ஏற்பாடு செய்யவும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துள்ளது. மேலும் உணவு இடைவெளியின் போது மாணவ-மாணவிகள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்படுவதுடன், சமூக இடைவெளியுடன் சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

220 பள்ளிகள்

இதில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை கண்டறியும் பரிசோதனை, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 143 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளும், மெட்ரிக் உடள்பட 58 தனியார் பள்ளிகளும், 19 அரசு உதவிபெறும் பள்ளிகளும் என மொத்தம் 220 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு

நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி நிர்வாகம் தங்களது ஆயத்த பணியினை தொடங்கியுள்ளது. அந்த வகையில் நீண்ட காலமாக பூட்டி கிடந்த வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் தீவிரமாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படாத வகையில் பள்ளி வகுப்பறை உள்பட அனைத்து இடங்களிலும் துப்பரவு ஊழியர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி, குடிநீர் தொட்டி சுத்தம் செய்வது ஆகியவை அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்பில் 30 மாணவ-மாணவிகள் கல்வி பெறுகின்றனர். இதனால் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த முன்ஏற்பாடுகள் பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story