ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி-கல்லூரிகள் திறப்பு; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எனினும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ளதால் இன்று (புதன்கிழமை) முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிக்கூடங்களில் தூய்மைப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது.
முன்னேற்பாடு பணி
ஈரோடு மாவட்டத்தில் 403 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜ் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் இடையன்காட்டு வலசு மாநகராட்சி உயர்நிலை பள்ளிக்கூடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவ -மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் முன்னேற்பாடு பணிகள் நேற்று தீவிரமாக நடந்தது.
மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பள்ளிக்கூட பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
சுழற்சி முறையில்...
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஆயிரத்து 904 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் 70 சதவீதம் பேர் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டு இருந்தனர். தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாணவர்கள் அதிகம் உள்ள வகுப்புகளில் சுழற்சி முறையில் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மூலம் முக கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் பாடங்கள் எடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் எடுக்கப்படும்.
உடல் வெப்பநிலை
வகுப்பறையில் நுழைவு வாயில் பகுதியில் கிருமிநாசினி மற்றும் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் போன்றவை தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இன்று முதல் கல்லூரிகளும் திறக்கப்படுவதால் அங்கும் முன்னேற்பாடு பணிகள் நேற்று நடந்தது.
அனைத்து கல்லூரி மாணவ -மாணவிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதுநிலை மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தினமும் பாடங்கள் எடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுவதால் மாணவ -மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கூட மற்றும் கல்லூரி அடையாள அட்டை, சீருடை இருந்தாலே மாணவ -மாணவிகள் அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






