காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பெண்- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பெண்- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
x

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்தியூர்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் மலர்ந்தது
அந்தியூர் அருகே பருவாச்சி அம்மன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் சரண்யா (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரி. இதேபோல் பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் கார்த்திக் (25). இவரும் என்ஜினீயரிங் பட்டதாரி. 
இந்தநிலையில் சரண்யாவும், கார்த்திக்கும் ஒரே கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
பெற்றோர் எதிர்ப்பு
இதனால் 2 பேரும் 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். மேலும் 2 பேரும் ஈரோட்டில் உள்ள ஒரே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சரண்யா தனது காதல் விவகாரத்தை தந்தை கிருஷ்ணனிடம் தெரிவித்து உள்ளார். மேலும் கார்த்திக்கை தான் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறி உள்ளார். ஆனால் அவரின் பெற்றோர், கார்த்திக் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இதற்கு சம்மதிக்க முடியாது என்று சரண்யாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திருமணம்
இந்தநிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 28-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார்கள். 
பின்னர் இருவரும் அங்கிருந்து ஊருக்கு பஸ்சில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரும்போது சரண்யா திடீரென்று வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்தி, சரண்யாவிடம் கேட்ட போது திருமணத்துக்கு முதல் நாளே (அதாவது கடந்த 27-ந் தேதி) நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இறந்தார்...
உடனே கார்த்திக் பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சரண்யாவை சிகிச்சைக்காக அனுமதித்தார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரண்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story