கூலிப்படையை ஏவி வாலிபர் படுகொலை


கூலிப்படையை ஏவி வாலிபர் படுகொலை
x
கூலிப்படையை ஏவி வாலிபர் படுகொலை
தினத்தந்தி 1 Sept 2021 8:18 PM IST (Updated: 1 Sept 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

கூலிப்படையை ஏவி வாலிபர் படுகொலை

கணபதி

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது26). 10-ம் வகுப்புவரை படித்துள்ளார். வேலைக்கு செல்வதில்லை. தாத்தா முருகன் (67) வீட்டில் வசித்து வந்தார். குடிபழக்கமும் இருந்தது. இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி வாலிபர் விஜயராகவன் அவர் தங்கி இருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விஜயராகவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தீவிர விசாரணை நடத்தினார். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விஜயராகவன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தாத்தாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும் வற்புறுத்தியுள்ளார். குடிபழக்கத்துக்குள்ளான பேரன், கல்யாணம் செய்தால் வரும் பெண்ணும் பாதிக்கப்படுவாள் என்று தாத்தா முருகன் கருதினார்.

 இதனால் திருமணத்துக்கு செவிசாய்க்காமல் தாத்தா காலம் கடத்தி வந்தார். ஆனால் பேரன் விஜயராகவன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், தயிர்இட்டேரி பகுதியை சேர்ந்த 2 பேரை அணுகி பேரனை கொலை செய்துவிடுமாறு கூறி ரூ.10 ஆயிரம் கொடுத்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து தயிர் இட்டேரி பகுதியை சேர்ந்த கனகராஜ் (40), திருப்பதி (27) ஆகிய 2 பேர், விஜயராகவனை மதுகுடிக்க வைத்துள்ளனர். போதை தலைக்கேறியதும் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு நைசாக தப்பிச்சென்றுவிட்டனர். 

போலீஸ் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்ததும் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்த கனகராஜ், திருப்பதி ஆகிய 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக தாத்தா முருகனிடம் தீவிர விசாரணை நடைபெற்று அவரும் கைது செய்யப்பட்டார்.

கூலிப்படையை ஏவி பேரனை தாத்தா கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story