உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்.
கோவை,
கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இடையில் அவ்வப்போது ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கும், செமஸ்டர் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகளும் நடத்தப்படாமல் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது.
அதன்படி 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புவரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகளை பொறுத்தவரை 4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகும் திறக்கப்பட்டுள்ளன.
மாணவ-மாணவிகள் ஆர்வம்
இந்த நிலையில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் நேற்று காலை 8 மணியில் இருந்தே சீருடை அணிந்து ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பள்ளிகளுக்கு வந்து இருந்தனர். சில மாணவ-மாணவிகளை தங்கள் பெற்றோர் அழைத்து வந்திருந்தனர். கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக பள்ளிகளில் இறைவணக்கம் நடைபெறவில்லை.
முகக்கவசத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப நிலையை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். அதன் பின்னர் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர்.
முன்னதாக வகுப்பறைக்குள் நுழைந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் முகமலர்ச்சியுடன் வரவேற்றனர்.
விழிப்புணர்வு
ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 20 மாணவ-மாணவிகள் மட்டுமே அமர வைக்கப்பட்டு இருந்தனர். முதல் நாளான நேற்று மாணவ-மாணவிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்து பாடம் நடத்தினர். அதன் பின்னரே ஒரு சில முக்கிய பாடங்கள் நடத்தப்பட்டது.
பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கும் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு மாணவ-மாணவிகள் சந்தித்ததால் ஒருவருக்கொருவர் கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த நாட்கள், ஆன்லைன் வகுப்பில் நடந்த சுவராசியமான நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
மாணவ-மாணவிகளுக்கு வகுப்பானது காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணி வரை நடைபெற்றது. மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது மாணவ- மாணவிகள் ஒருவருக்கொருவர் உணவினை பரிமாறக்கூடாது அறிவுரை வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள 193 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் என மொத்தம் 658 பள்ளிகளிலும் தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றி திறக்கப்பட்டன.கோவை மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் நேற்று 67 சதவீதம் மாணவர் கள் வருகை தந்து இருந்தனர்.
கல்லூரி மாணவர்கள்
கல்லூரிகளை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிக்கு நேரில் வர அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே இவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தன.
அரசு அறிவுறுத்தியபடி கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வந்திருந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் நேற்று குறைந்த அளவிலான மாணவ- மாணவிகளே வந்து இருந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு அமரச்செய்து அந்தந்தத் துறை பேராசிரியர்கள் பாடங்களை நடத்தினர்.
சில தனியார் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. முக்கிய சாலைகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பாக சாலையை கடக்கும்போது போக்குவரத்து போலீசார் உதவி செய்தனர்.
Related Tags :
Next Story






